கொரோனா நிவாரண நிதியாக ரூ.80 லட்சம் வழங்கியிருப்பதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணப்பணிக்காக யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோல் மாநில அரசுகளும் நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்காக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல்வாதிகள், குடிமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கிரிகெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரெய்னா, கோலி, ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் “நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நான் பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ.45 லட்சத்தையும், மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும், ஃபீடிங்க் இந்தியா மற்றும் தெரு நாய்களின் நலனுக்கான அமைப்புக்கு தலா ரூ.5 லட்சத்தையும் அளித்துள்ளேன். நமது தலைவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஆதரிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.