இந்திய கிரிக்கெட் அணி, வரும் 23ம் தேதி புறப்பட்டுச் செல்கிறது இங்கிலாந்துக்கு. அங்கு
அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 ஆம் தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியுடன் ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தொடர்களில் பங்கேற்பதற்கு முன்பாக வீரர்களுக்கு 'யோ-யோ' என்ற உடல் தகுதித் தேர்வை நடத்துவது வழக்கம். இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும்.
இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி, இந்திய ஏ அணி வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் சமீபத்தில் நடந்தது. இதில் ஏ அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஒரு நாள் அணியில் இடம்பெற்ற அம்பத்தி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் தேர்வு பெறவில்லை. இதனால் இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வீரர்களுக்கும் ’யோ யோ’ தேர்வு நடந்தபோது, அந்த நாளில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளியாயின. ரோகித் சர்மா, யோ யோ உடல் தகுதி தேர்வில் தகுதி பெறவில்லை என்றும் அவருக்குப் பதிலாக ரஹானே இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டன. இதையடுத்து ரோகித்தை விமர்சித்தும் விவாதங்கள் இடம்பெற்றன. சில மீடியாவும் சேனல்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நேற்று நடந்த யோ யோ டெஸ்டில் ரோகித் தேர்வு பெற்றார். இதன்மூலம், இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது உறுதியானது.
இதையடுத்து அவர் கூறும்போது, ‘தேவையில்லாமல் சில சேனல்களும் மீடியாவும் தவறான செய்திகளை பரப்புகின்றன. ’நான் எங்கே போயிருந்தேன். எங்கு நேரத்தைச் செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ யோ தேர்வில் பங்கேற்கவில்லை’ என்பதையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது என் சொந்த விவகாரம். செய்திகளை வெளியிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து வெளியிடுவது நல்லது’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.