தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த கடைசி டி-20 போட்டியில், தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் அதிரடியாக விளையாட, ரோகித் ஷர்மா 9 (8) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராத் கோலியும் 9 (15) ரன்களில் வெளியேற, 36 (25) ரன்களில் தவானும் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டான் டி காக் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 28 (26) ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் பாவுமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். அதிரடியாக விளையாடிய டி காக் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். பாவுமா 27 (23) ரன்கள் எடுத்தார். 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி இலக்கை எளிதில் எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார். ரோகித் தனது 98வது டி-20 போட்டியில் நேற்று களமிறங்கினார். இதன் மூலம் டி-20 அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை தோனியுடன் (98 போட்டிகள்) அவர் பகிர்ந்து கொண்டார். இந்தப்பட்டியலில் சுரேஷ் ரெய்னா (78 போட்டிகள்), விராத் கோலி (72 போட்டிகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஒட்டு மொத்தமாக சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் பட்டியலில், பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் மாலிக் (111 போட்டிகள்) முதலிடத்திலும், ஷாகித் அப்ரிதி (99 போட்டிகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.