விளையாட்டு

“எல்லா வகையிலும் இது மோசமான ஆட்டம்” - ரோகித் வருத்தம்

“எல்லா வகையிலும் இது மோசமான ஆட்டம்” - ரோகித் வருத்தம்

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி அனைத்து வகையிலும் மோசமாக விளையாடியதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

ஹாமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 219 ரன்கள் குவித்தது. ஆனால், பின்னர் விளையாடிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தோனி 39 ரன்கள் அடித்தார். 

ரோகித், தவான், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா என 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. 80 ரன்கள் வித்தியாசம் என்பது இந்தியவை பொறுத்தவரை மிகப்பெரிய தோல்வி. இதற்கு முன்பாக 2010இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததே பெரியதாக இருந்தது.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “இது மிகவும் கடினமான போட்டி. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவிலும் சரியாக செயல்படவில்லை. நாங்கள் போட்டியை சரியாக தொடங்கவில்லை. 200 ரன்கள் என்பது சேஸ் செய்ய எளிதான இலக்கு அல்ல. 

ஆனால், நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்துவிட்டோம். இதுபோன்ற இலக்குகளை கடந்த காலங்களில் சேஸ் செய்திருக்கிறோம். அதனால்தான், 8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம். எவ்வளவு இலக்கு இருந்தாலும் அடித்துவிடலாம் என நினைத்தோம். ஆனால், சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. மிகப்பெரிய இலக்க விரட்டும் போது அதுதான் முக்கியமானது” என்றார்.