இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளது. 1 - 1 என சமநிலையில் உள்ளது தொடர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மாவின் வருகை பேட்டிங்கில் வலு சேர்த்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் இந்தியாவுக்கு இவ்வீரர்கள்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டுமென தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
“இந்த தொடரில் இதுவரை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இருந்தாலும் அவரை ஆடும் லெவனில் வைத்திருக்கவே விரும்புகிறேன். அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன். ரோகித்துடன் அவரே இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்.
அதே நேரத்தில் சுப்மன் கில்லை ஐந்தாவது பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் களம் இறக்க வேண்டும். எனக்கு தெரிந்து அவர் ஓப்பனிங்கில் எந்த அளவிற்கு செயல்படுவார் என தெரியவில்லை. அண்டர் 19 போட்டிகளில் அவர் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளது. அதனால் கில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக தான் களம் இறங்க வேண்டும். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. கில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக விளையாடினால் விஹாரி அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.