விளையாட்டு

முதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி 

முதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி 

webteam

முதல் மூன்று வீரர்கள் சொதப்பியது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடின. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை குவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். 

இவர்களைத் தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 25 பந்துகள் விளையாடி 6 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். எனவே இந்திய அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் பவர் ப்ளேவில் குறைந்தபட்ச ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது. 

அத்துடன் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் முதல் முன்று ஆட்டக்காரர்கள் ஒரு ரன்னில் அவுட் ஆனது இதுவே முதல் முறை. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடித்துள்ள மொத்த ரன்களில் 92% சதவிகித ரன்களை முதல் மூன்று வீரர்களே அடித்துள்ளனர். இந்த முக்கியப் போட்டியில் இவர்கள் மூன்று பேரும் சொதப்பியது மிகவும் ஏமாற்றத்தை அளித்ததுடன் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அதுவே அமைந்துவிட்டது.