ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரோகித் மற்றும் தவான் அரைசதம் அடித்துள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் மற்றும் ரோகித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் 5 ஓவர்களில் இவர்கள் 18 ரன்கள் சேர்த்தனர். அதேபோல 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 41 ரன்கள் எடுத்தனர். அதன்பிறகு இருவரும் சற்று அடித்து ஆட தொடங்கினர். இதனால் 15 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகார் தவான் 17ஆவது ஓவரில் தனது அரைசதத்தை கடந்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக தனது 4வது அரைசதத்தை பதிவு செய்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் 2000 ரன்களை கடந்துள்ளார். அதுவும் 37 இன்னிங்ஸில் கடந்துள்ளார். அத்துடன் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா 16ஆவது முறையாக முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் ஜோடியாக சேர்த்துள்ளனர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் மற்றும் கங்குலி ஜோடியாக 100 ரன்களை 21 முறை அடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து தவான் மற்றும் ரோகித் ஜோடி உள்ளனர். அத்துடன் இந்திய சார்பில் ஜோடியாக 100 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் இவர்கள் 2ஆம் இடத்தில் உள்ளனர்.
சற்றுமுன்னர் வரை இந்திய அணி 25 ஓவர்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளனர். ரோகித் சர்மா 70 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 57 ரன்கள் சேர்த்து கவுல்டர்நைல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷிகார் தவான் 72 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களுடன் களத்தில் உள்ளார்.