விளையாட்டு

"ஒரு சதத்துக்கு ஒரு லட்சம்" சுனில் கவாஸ்கர் அளித்த நிதியின் ரகசியம் !

jagadeesh

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காகப் பிரதமர் மற்றும் மாநில நிவாரண நிதிக்கு இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியளித்தார். இதில் ரூ.35 லட்சம் பிரதமர் நிவாரணத்துக்கும், மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு 24 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்து வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவுள்ள நிலையில், இதனை மேலும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கொரோனா பாதிப்பைத் தடுக்க பொது மக்கள் தங்களால் இயன்ற நிதியைத் தாராளமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நிதியளித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்ட பலரும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து வருகின்றனர்.

இதில் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் தன் பங்குக்கு ரூ.59 லட்சம் கொரோனா தடுப்பு நிதியாக வழங்கினார். அது ஏன் ரூ.59 லட்சம் நிதியாக அவர் வழங்க வேண்டும்? அதற்குக் காரணம் என்ன? என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவரது மகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரோஹன் கவாஸ்கர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

"கடந்த வாரமே கொரோனா தடுப்புக்கான நிதியை வழங்கிவிட்டோம். இந்தியாவுக்காக அவர் 35 சதங்கள் அடித்ததால் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ35 லட்சமும், மும்பைக்காக 24 சதங்களை விளாசியுள்ளதால் மகராஷ்ட்ரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.24 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.