விளையாட்டு

நடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்

webteam

டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் ஃபெடரரும் - ரஃபேல் நடாலும் மோதுகின்றார்கள் என்றால் ரசிகர்களுக்கு அது சிறப்பு விருந்துதான். இங்கு தீபாவளி பொங்கலுக்கு தல - தளபதி படம் ரிலீஸானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபெடரருக்கு வயது 36. ஆனால்  இன்றும் அவர் இளம் வீரர்களுக்கு கடும் சவால் விடுத்து வருகிறார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கு வயது 32.  செம்மண் ஆடுகளத்தின் நாயகனான இவர் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். பல முன்னணி வீரர்களை பின்னுக்குத்தள்ளி உலகத்தர வரிசையில் இவர்கள் முதல் இரண்டு இடத்தில் நீடிக்கின்றனர். தற்போது இவர்கள் இருவேறு டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச்சை எதிர்த்து விளையாடிய ஃபெடரர், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இந்தப்போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 98 பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன், உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஃபெடரர், தற்போது நடாலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

கடந்த வாரம் நடைப்பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 11 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தைமை எதிர்த்து விளையாடிய நடால் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இந்தப்போட்டியில் 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று கோப்பையை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17 ஆவது பட்டத்தை வென்று நடால் சாதித்தார். மேலும் ஓரே கிராண்ட்ஸ்லாம் தொடரில் 11 பட்டங்களை வென்றுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்கிரேட் கோர்ட்டின் சாதனையை நடால் சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் நடால் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.தற்போது நடாலை பின்னுக்குத் தள்ளி ஃபெடரர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.