விளையாட்டு

“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா

“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தனது கசப்பான காலங்களை பகிர்ந்துள்ளார்.

2007-ஆம் டி20 உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி உலக நாடுகளுக்கு சிம்ப சொப்பனமாக மாறிவிட்டது. பல போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், இந்திய அணியிடம் மண்ணை கவ்வாத நாடே இல்லை எனக் கூறலாம். அனைத்து அணிகளையும் இந்தியா அடித்து துவைத்துவிட்டது. அதற்கு காரணம் இந்திய அணியிடம் இருந்த வலுவான பேட்டிங். இதனால் இந்த காலகட்டத்தில் இந்தியாவில் புதிய பேட்ஸ்மேன்கள் இடம்பிடிப்பதும், பழைய பேட்ஸ்மேன்கள் மீண்டும் அணிக்குள் நுழைவதும் பெரும் சவாலாக இருந்தது. இதில் பல வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறிய ஒரு பேட்ஸ்மேன் தான் ராபின் உத்தப்பா.

2007-ஆம் டி20 உலகக் கோப்பையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் உத்தப்பா. களமிறங்கி சில பந்துகளை சந்தித்த உடனே அதிரடியை தொடங்கிவிடுவார். இதனால் இவர் களமிறங்கினால் சிக்ஸர் அல்லது பவுண்டரிகள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இப்படி ஃபார்மில் இருந்த உத்தப்பா குறுகிய காலங்களிலேயே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பல போட்டிகளில் ராபின் உத்தப்பா அணியின் 15 பேரில் ஒருவராக இருந்த போதிலும், விளையாடும் 11 பேரில் ஒருவராக இடம்பிடிக்கவில்லை.

அந்த காலக்கட்டத்தில் இருந்த தனது கசப்பான நிகழ்வுகளை உத்தப்பா தற்போது பகிர்ந்துள்ளார். “2009-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை எனது கசப்பான காலமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து நான் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றேன். ஒருமுறை இந்திய அணியினர் விளையாடிக்கொண்டிருந்த போது, நான் பால்கனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி, எனக்கு அங்கிருந்து ஓடிவிடலாம் அல்லது குதித்து விடலாம் எனத் தோன்றியது” என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் உத்தப்பா, இறுதியாக இந்திய அணியில் 2015-ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.