விளையாட்டு

”இந்த ஆண்டு ஐபிஎல்லில் ரிஷப் விளையாட மாட்டார்; அவர் இடத்தை நிச்சயம் நிரப்புவோம்” - கங்குலி

PT

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகிய சவுரவ் கங்குலி, தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட இருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அவருடைய பங்கீடு அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சவுரவ், “ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் சிறந்த அணியாக விளங்குகிறது. விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார். அவர், அணியில் இடம்பெறாதது டெல்லி கேப்பிடல்ஸ்க்கு பாதிப்பையே தரும். என்றாலும், நாம் அதைச் சரிப்படுத்தி விளையாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், இடம்பெறாததால் அவருக்குப் பதில் வேறு வீரரை, அணி கேப்டனாக நிர்ணயம் செய்யும் என தெரிகிறது.

முன்னதாக, கார் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட், ஆரம்பத்தில் டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அதன்பிறகு முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் அறுவைச்சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனாலும், அவர் நல்ல உடற்தகுதியைப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளது.

தற்போது ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், இலங்கை தொடர், நியூசிலாந்து தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கவாஸ்கர் பார்டர் டிராபி டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாட மாட்டார் என தெரிகிறது. இதில், ஐபிஎல்லும் தற்போது சேர்ந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அவர் முழு உடற்தகுதியை எட்டினால் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்