டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 7 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இன்றைய போட்டியில் சொதப்பியது. பிரித்வி ஷா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 9 ரன்னிலும் நடையை கட்டினர். ரகானே 8 ரன்னிலும், ஸ்டொய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆக கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். பவுண்டரிகளாக விளாசி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ரிஷ்ப் பண்ட் 32 பந்துகளில் 51 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த அறிமுக வீரர் லலித் யாதவ் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் கர்ரன் 21, அஸ்வின் 7 ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். கிறிஸ் வோக்ஸ் 15, ரபாடா 9 ரன்களுடன் களத்தில் இருக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்தேவ் உனாகட் 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிகூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.