விளையாட்டு

'புதிய காற்றை சுவாசிக்கிறேன்' - நீண்ட நாட்களுக்குப்பின் இன்ஸ்டாவில் ரிஷப் பண்ட் பதிவு

JustinDurai

நீண்ட நாட்களுக்குப்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் ரிஷப் பண்ட்.

இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

இதனிடையே, அவர் உடல்நலம் தேறி வருவதற்கு 6 மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை முழுமையாக தவற விடுகிறார் ரிஷப். இதே போல் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய தகுதியாகிவிட்டார் என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டில் இருந்தே காயம் ஆறும் வரையில் ஓய்வெடுப்பார் எனவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.

அதில், ரிஷப் பண்ட் வெளியே அமர்ந்து தனது முகத்தை காட்டாமல் இயற்கையை ரசிக்கிறார். மேலும் தனது ஸ்டோரியில், "வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்டா ஸ்டோரி  வைரலாகி வருகிறது. இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் செய்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு “சீக்கிரம் குணமடைந்து இந்திய அணிக்காக ஆடுவீர்கள்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.