விளையாட்டு

'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த்

'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப், இங்கிலாந்தில் நடந்த, வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான முத்தரப்பு தொடரிலும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் தான் சேர்க்கப்பட்டது குறித்து ரிஷப் பந்த் அண்மையில் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார் அதில் அவர் " தோனி எனக்கு அண்ணன் போன்றவர். அவரிடம் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்க விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் அவரிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளேன். ஐபிஎல் தொடரில் கூட அவரிடம் ஏராளமான யோசனைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன்."

தோனி எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு டிப்ஸ்களை வழங்கியுள்ளார். விக்கெட் கீப்பிங் செய்யும் வீரருக்கு கண்கள் கைகளின் ஒருங்கிணைப்பும் உடம்பின் பேலன்ஸின் மிகவும் முக்கியம் என என்னிடம் பலமுறை கூறியுள்ளார். இது எனக்கு இப்போது வரை மிகவும் உபயோகமாக இருக்கிறது" என்றார் ரிஷப் பந்த்.

மேலும் "இந்திய அணியின் ஓய்வறையில் தோனி இருந்தாலே ஒரு உற்சாகம் இருக்கும். அவர் எப்போதுமே எனக்கு ஆதரவாக பல்வேறு கட்டங்களில் உதவியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் நான் சேர்க்கப்பட்டது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அந்தச் செய்தியை கேட்ட நிமிடம் என் வாழ்கையில் மறக்க முடியாத தருணம், அப்போது நான் துள்ளிக் குதித்தேன்" என ரிஷப் பந்த் தான் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.