ஆடவர் கிரிக்கெட்டின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை ஐசிசி தேர்வு செய்து கெளவரவப்படுத்தியுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவித்து விருது வழங்கவதாக ஐசிசி அறிவித்திருந்தது. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதத்திலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்திருந்தது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தது.
முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாடமியும் ரசிகர்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்திருந்தது.
மேலும் வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்திய அணியின் ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிட்னியில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் 89 ரன்களையும் இக்கட்டான நேரத்தில் அடித்தது பலரது கவனத்தை ஈர்த்தது. அதனால் ரிஷப் பன்ட் இந்த விருதை பெறுகிறார்.
மகளிர் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஷப்னிம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சாளரான இவர் அண்மையில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அவர் கெளரவிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.