விளையாட்டு

எப்படி இருக்கிறார் ரிஷப் பண்ட்? - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்!

JustinDurai

ரிஷப் பண்டின் உடல்நிலை சீராக உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் இன்று காலை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு கார் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவருக்கு கை, கால், முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் காமி சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரிஷப் பண்டிற்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன். ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ரிஷப் பண்டிற்கு லேசான காயங்கள்தான் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அபாய கட்டத்தை அவர் தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ரிஷப்பின் ரசிகர்களும் நலன் விரும்பிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.