தோனி ஏன் மிகச் சிறந்த அணித் தலைவராக இருந்தார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்ட்டிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இரண்டு முறை உலகக் கோப்பையை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்ட்டிங் இப்போது தோனி குறித்துப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரிக்கி பாண்ட்டிங் "தோனி தன்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பார். அதுதான் ஒரு அணித் தலைவருக்கான மிக முக்கியமான அடையாளமாக பார்க்கிறேன். நானும் அதுபோல இருக்க முயற்சி செய்து பார்த்து இருக்கிறேன். ஆனால் அது முடியாமல் போனது" என்றார்.
மேலும் தொடர்ந்த ரிக்கி பாண்ட்டிங் "தோனி கேப்டனானதும் இந்திய அணி கிரிக்கெட்டில் மிகப்பெரிய எழுச்சியைப் பெற்றது. ஒரு வீரரிடம் இருந்து சிறந்ததை வெளியே கொண்டு வரும் திறன் தோனிக்கு இருந்தது. தோனி கேப்டனாக இருக்கும் வரை அணியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அதனை அணியில் இருந்த சக வீரர்களும் ரசித்தனர். அதுதான் அவர் சிறந்த கேப்டனாக இருந்ததற்கு காரணம்" என்றார்,
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் "இப்போது நான் இந்தியாவில் அதிக நேரம் செலவிடுகிறேன். இப்போது எனக்கு நன்றாக புரிகிறது இந்த நாட்டின் எத்தகைய பகுதியில் இருந்து தோனி உருவாகியிருக்கிறார் என்று. உலகம் முழுவதும் நீங்கள் பயணம் செய்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை பற்றி பேசாமல் இருந்ததில்லை. அவருடைய தலைமைப் பண்பையும், அவரது நிதானத்தையும் புகழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள்" என்றார்.