நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டிக்குப் பின் அடுத்த 16 போட்டிகள் வேறு நகர மைதானங்களுக்கு மாற்றப்படுகின்றன. எந்தெந்த நகரங்களில் அவை நடைபெறவுள்ளன என்பதை பார்க்கலாம்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் 6 நகர மைதானங்களில் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. வீரர்கள் பயணம் செய்வதைக் குறைக்கும் விதமாக ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பஞ்சாப் மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடவில்லை. சீசனின் முதல் இருபது லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பை மைதானங்களிலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன.
மும்பை, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் சென்னையிலும், சிஎஸ்கே, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மும்பையிலும் முகாமிட்டிருந்தன. இந்நிலையில் 20 லீக் போட்டிகளும் இன்றுடன் முடிவடையும் நிலையில் அணிகள் அனைத்தும் டெல்லி மற்றும் அகமதாபாத்திற்கு பறக்கவுள்ளன.
மே 8 ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்த 16 லீக் போட்டிகள் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறவுள்ளன. கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்திலும், சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் டெல்லி மைதானத்திலும் தலா இரு போட்டிகளில் விளையாடவுள்ளனர். முதல் இருபது லீக் போட்டிகளில் சந்தித்துக் கொள்ளாத அணிகள் இனி வரும் 16 லீக் போட்டிகளில் நேருக்கு நேர் களம் காணவுள்ளன.
ஐபில் தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும், மும்பை மற்றும் சென்னை அணிகள் இந்த இரண்டாவது அட்டவணையில் சந்திக்கவுள்ளன. மே ஒன்றாம் தேதி டெல்லியில் இந்த போட்டி நடைபெறுகிறது. மே 9 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான போட்டிகள் அனைத்தும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா மைதானங்களில் விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.