விளையாட்டு

கோலிக்கு 'ரெஸ்ட்' ! மயாங்க் அகர்வாலுக்கு 'சான்ஸ்'

கோலிக்கு 'ரெஸ்ட்' ! மயாங்க் அகர்வாலுக்கு 'சான்ஸ்'

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா, கோலி, பண்ட், ஜடேஜா ஆகியோர் சதங்களையும் அரைச் சதமும் அடித்து அசத்தினர். இதனால் நாளை தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியில் சிலருக்கு ரெஸ்ட் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

அதன்படி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நெருங்குவதால் வாயப்புகள் வரும் போதெல்லாம் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளி்த்து வருகிறது, இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம். இப்போது கோலிக்கு ஓய்வளிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்படுவார். மேலும் ஆல்ரவுண்டரான ஹனுமா விஹாரிக்கும் இந்தப் போட்டியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக ப்ரித்வி ஷாவுடன், கே.எல்.ராகுலே களமிறக்கப்படுவார் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் அவ்வளவு பிரமாதமாக செயல்படவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பந்து வீச்சாளர்கள் யாருக்கும் ஓய்வளிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாளையப் போட்டியில் பங்கேற்கும் உத்தேச அணியின் விவரம்: ப்ரித்வி ஷா, ராகுல், மயாங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ்.