விளையாட்டு

தேசிய விளையாட்டு தின‌ம்: ஹாக்கி கதாநாயகன் தயான் சந்த்

தேசிய விளையாட்டு தின‌ம்: ஹாக்கி கதாநாயகன் தயான் சந்த்

webteam

அசாத்தியமான திறமையால் ஹாக்கி வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தயான் சந்த். அவரது பிறந்த தினத்தை இன்று, தேசிய விளையாட்டு தின‌மாக கொண்டாடி வருகிறோம். 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்த தயான் சந்த், தமது 16-வது வயதில் தந்தையைப் போன்று ராணுவப் பணியில் சேர்ந்தார். அதுவரை ஹாக்கி மட்டையைத் தொடாத அவர், பின்னாளில் ஹாக்கி பயிற்சியால் ஈடுபட்டு சாதிக்கத் தொடங்கினார் 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தமது சர்வதேச ஹாக்கி பயணத்தை தொடக்கினார். 1928-ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 3 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார். பந்தை கட்டுக்கோப்பாக கடத்திச் செல்வதிலும், கோல் அடிப்பதிலும் வல்லவரான தயான் சந்த், 1934 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டார். சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் அடித்துள்ள தயான் சந்த், ஓலிம்பிக்கில் மட்டும் 101 கோல்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் விளையாடிய அவர், 1949 ஆம் ஆண்டில் தமது ஹாக்கி மட்டைக்கு ஓய்வு கொடுத்தார். அவரின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்தது என்பதற்கு ஆஸ்திரியாவின் வியன்னாவில் தயான் சந்தின் உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதே சான்று. உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த தயான் சந்த்துக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருது, 1956ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு, 74-வது வயதில் மண்ணை விட்டு அவர் மறைந்தார். தயான்சந்தின் சாதனைகளை போற்றும் வகையில், விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனை படைப்போருக்கு அவரது பெயரில் 2002 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.