விளையாட்டு

பழி தீர்த்த இங்கிலாந்து - 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

நிவேதா ஜெகராஜா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ரீஸ் டோப்லி அசத்தினார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அதிகபட்சமாக மொயின் அலி 47 ரன்களும், டேவிட் வில்லி 41 ரன்களும் எடுத்தனர்.

49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஷிகர் தவன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

வழக்கம்போல் இப்போட்டியிலும் கோலி ரன் சேர்க்க தவறினார். பின்னர் வந்த வீரர்களும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 29 ரன்களை எடுத்தனர். முடிவில் 38.5 ஓவர்களிலேயே 146 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் நூறு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

அபாரமாக பந்து வீசிய ரீஸ் டோப்லி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் ஆட்டநாயகன் விருதும் வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.