இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் மூத்த வீரர்களும் முன்னாள் கேப்டன்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம்பெற்றிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த பீகார் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது, லிஸ்ட் A கிரிக்கெட் வரலாற்றில் பீகார் அணி மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 506/2 ரன்கள் எடுத்திருந்த முந்தைய சாதனையை பீகார் தற்போது முறியடித்துள்ளது.
இந்திய அணியின் புதிய புயலாக வலம் வரும் 14 வயது நிறைந்த வைபவ் சூர்யவன்ஷி, விஜய் ஹசாரே தொடரில் சதமடித்து சாதனை படைத்தார். பீகார் அணியில் விளையாடும் வைபவ் சூர்ய்வன்ஷி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து, லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றில் மூன்று இலக்கங்களை எட்டிய இளம்வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யாவன்ஷி ஏற்கெனவே தாம் பங்குபெற்ற சையத் முஷ்டாக் அலி, ஐபிஎல், யூத் ஒருநாள், யூத் டெஸ்ட் இந்தியா ஏ மற்றும் யு19 ஆசியக்கோப்பை உள்ளிட்டவற்றிலும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விளையாடிய அவர், 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் வந்த வீரர்களும் பீகார் அணியை சிறப்பான ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். பியூஷ் சிங் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாலும், விக்கெட் கீப்பர் ஆயூஷ் ஆனந்தும் (116), கேப்டன் ஷகிபுல் கனியும் (128*) சதம் அடித்ததுடன் இமாலய இலக்கையும் குவித்து உலக சாதனை படைத்தனர். அதிலும், கேப்டன் ஷகிபுல் கனி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். அவர் வெறும் 32 பந்துகளில் சதம் அடித்து, ஏற்கெனவே அன்மோல்பிரீத் சிங் வைத்திருந்த 35 பந்துகளின் முந்தைய சாதனையை முறியடித்தார். இதே இன்னிங்ஸில் வைபவ் 36 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜார்கண்ட் - கர்நாடகம் போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் அதிகவேக சதம் அடித்தார். இதன் மூலம் விஜய் ஹசரே டிராபியில் அதிவேக சதம் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.முதல் இடத்தில் பீகார் அணி கேப்டன் ஷகிபுல் கனி 32 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.
உலகளவில் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இதற்கு முன் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கின் 29 பந்துகளில் சதம் (2023 இல் டாஸ்மேனியாவுக்கு எதிராக) முதலிடத்திலும்,டிவில்லியர்ஸின் 31 பந்துகளில் சதம் (2015 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக) இரண்டாவது இடத்திலும் தற்போது மூன்றாவதாக ஷகிபுல் கனி 32 பந்துகளில் சதம் [ அருணசலாப் பிரதேசத்திற்கு எதிராக ], பதிவு செய்யப்பட்ட வேகமான சதமாகும்.
வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்களை கடந்த போது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட வேகமான 150 ஆகும். இதற்குமுன் 2015 உலகக் கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நடைபெற்ற போட்டியில் பீகார் அணி 39 சிக்ஸர்களை பதிவு செய்தது. இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு அணி அடிக்கப்பட்ட அதிகப்பட்ச சிக்ஸராகும்.இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக 28 சிக்ஸர்கள் அடித்து கனடாவின் சாதனையை முறியடித்தனர்.
இந்தப் போட்டியில் அருணாச்சல பிரதேச அணி 177 ரன்களில் ஆட்டமிழக்க 397 ரன்கள் வித்தியாசத்தில் பீகார் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது.