இலங்கையில் ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கத் தயாராகவே இருக்கிறோம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சுற்றுப் பயணத்தையும் பிசிசிஐ ரத்து செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு உடனடியாக கடிதம் எழுதியது.
அதில் "ஜூலை மாத இறுதியில் இலங்கை இந்தியா தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுங்கள். இதற்காக வீரர்கள் தனிமைப்படுத்துதல், ரசிகர்களின் நலனுக்காக காலி மைதானத்தில் கூட போட்டிகள் நடத்தத் தயாராக உள்ளோம். தயவுசெய்து இந்தத் தொடரை ரத்து செய்து விடாதீர்கள். ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரும் ரத்தாகிவிட்டதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால் பிசிசிஐ-க்கு இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்துப் பதிலளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் " இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. பொது முடக்கம் முடிவுக்கு வர வேண்டும், விமானப் பயணங்கள் குறித்துத் தெரிய வர வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்புகளைக் கொடுத்தால் நாங்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்" என்றார் அவர்.