பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களுர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 28வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களுர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி, 3ல் தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் சிறப்பாக விளையாடிவருகின்றனர். மற்றவீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. டேவிட் மில்லர் இந்த தொடரில் இன்னும் சரியாக சோபிக்கவில்லை. பந்துவீச்சில் ஷமி மற்றும் ஷாம் குரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பெங்களுர் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிள்ள 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. பெங்களுர் அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பார்த்தீவ் பட்டேல் மற்றும் டிவில்லியர்ஸ் ஒரிரு போட்டிகளில் சற்று விளையாடினாலும் அவர்களின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு வித்திடவில்லை. அதேபோல பெங்களுர் அணியின் பந்துவீச்சும் மிரட்டும் அளவிற்கு இல்லை. குறிப்பாக உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பந்துவீச்சு மோசமாக உள்ளது. சஹால் மட்டும் சுழலில் மிரட்டிவருகிறார்.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இவற்றில் பஞ்சாப் 12 போட்டிகளிலும், பெங்களுர் அணி 10 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. மொஹலியில் நடைபெற்றுள்ள 6 போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களுர் அணிகள் தலா மூன்று போட்டிகளில் வெற்றிப் பெற்றனர். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று பெங்களூர் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என அந்த அணியின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய போட்டியில் பெங்களுர் அணி தோற்றால் ஐபில் வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.