விளையாட்டு

சிக்ஸர்களாக பறக்கவிட்ட ஏபிடி : கடைசி ஓவரில் ஆர்.சி.பி த்ரில் வெற்றி

EllusamyKarthik

துபாயில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 177 ரன்களை குவித்தது ராஜஸ்தான். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே சறுக்கியது. அந்த அணியின் ஓப்பனர் ஆரோன் ஃபின்ச் 14 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராத் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் இணைந்து 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

நிதானமாக விளையாடிய படிக்கல்லும், கோலியும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டானதும் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் கிரீஸுக்கு வந்தார்.

அவரோடு குர்கீரத் சிங்கும் இணைந்து இருவரும் 41 பந்துகளில் 78 ரன்களை குவித்தனர். அதில் டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்கள் குவித்து பெங்களூருவுக்கு வெற்றியை வசமாக்கினார். 

இதில் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஏபிடி. இறுதியில் இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் 179 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி.