ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ஆனால் அந்த முடிவு அவருக்கு தோல்வியை தரும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதல் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் ஃபின்ச் இருவரும் சிறிது நேரம் நிலைத்தனர். 12 பந்துகளை சந்தித்த படிக்கல் 18 ரன்களை எடுத்துவிட்டு அவுட் ஆனார். மறுபுறம் 18 பந்துகளை சந்தித்த ஆரோன் ஃபின்ச் 20 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, டி வில்லியர்ஸ் களமிறக்கப்படாமல் இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் களமிறக்கப்பட்டனர். விராட் கோலியின் இந்த புதிய திட்டம் அவருக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 13 (14) ரன்களிலும், சிவம் துபே 23 (19) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர் 5 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். 39 பந்துகளில் 48 ரன்களை எடுத்த விராட் கோலி அரை சதம் எட்டாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கிரிஸ் மோரிஸ் 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 25 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.
அந்த அணியின் பேட்டிங்கில் அனைவரும் சீரான பங்களிப்பை கொடுத்தாலும், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தது கைகொடுக்கவில்லை. 4வது இடத்தில் டி வில்லியர்ஸ் களமிறக்கப்பட்டிருந்தால் அவரது அதிரடியால் 190 ரன்களை பெங்களூர் கடந்திருக்கலாம் எனத் தோன்றியது. வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களை அடிக்க 14 பந்துகளையும், சிவம் துபே 23 ரன்களை அடிக்க 19 பந்துகளையும் எடுத்துக்கொண்டது தேவையற்றதாக தெரிந்தது. கடைசி நேரத்தில் மோரிஸ் காட்டிய அதிரடி அணியின் ஸ்கோர் 170 ரன்களை கடக்க உதவியது.
பஞ்சாப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முருகன் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும் 4 ஓவர்களுக்கு 45 ரன்களை வாரிக்கொடுத்தது மைனஸாக அமைந்தது. மற்ற வீரர்கள் அனைவரும் அதிக ரன்களை கொடுக்காமல் இருந்தது பெங்களூரின் ஸ்கோரை கட்டுக்குள் வைத்தது.
172 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. ஆரம்பம் முதலே அதிரடியை காட்டிய மயங்க் அகர்வால் 25 பந்துகளில் 45 ரன்களை விளாசிவிட்டுச் சென்றார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் நிலையான ஆட்டத்தைக்கொடுத்த கேப்டன் ராகுல், பின்னர் வந்த கிறிஸ் கெயிலுடன் ஜோடி சேர்ந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார். வயதானாலும் தான் இன்னும் பாஸ் தான் என்பதை நிரூபித்த கிறிஸ் கெயில் பிரமாதமான இன்னிங்ஸை கொடுத்தார். இருவருமே அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கடைசி நேரத்தில் இருவரும் பொழிந்த சிக்ஸர் மழையால் 6 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது.
அந்த ஓவரை இருசு உதானா அல்லது முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் வீசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுழல் பந்துவீச்சாளரான யஸ்வேந்திர சாஹல் ஓவரை வீசினார். முதல் பந்திலோ அல்லது 2வது பந்திலோ போட்டி முடிந்துவிடும் என நினைத்தபோது, சூப்பரான பவுலிங் மூலம் பதட்டத்தை வரவழைத்தார் சாஹல். 4 பந்துகளுக்கு ஒரு ரன்களை மட்டுமே அவர் கொடுக்க, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. 5வது பந்தை சிங்கிளுக்கு தட்டிவிட்டு ராகுல் ஓட, மறுமுனையில் ஓடிய கிறிஸ் கெயில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. போட்டி சூப்பர் ஓவர் செல்லுமோ என எதிர்பார்த்த நிலையில், அசால்ட்டாக ஒரு சிக்ஸரை அடித்து வெற்றியை பறித்தார் நிக்கொலஸ் பூரான்.
பெங்களூர் பவுலர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டை எடுக்காதது தோல்விக்கு வழிவகுத்தது. கிரிஸ் மோரிஸ், நவ்தீப் சைனி ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்தியிருந்தாலும், முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ரன்களை வாரிக்கொடுத்தது சொதப்பலாக இருந்தது. மொத்தத்தில் பஞ்சாப்பின் அபார பேட்டிங்கில் வீழ்ந்தது பெங்களூர்.