ஐபிஎல் போட்டியின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை இரு அணிகளும் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், தலா 4 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.
பெங்களூரைப் பொறுத்தவரை சீசன் தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் வந்து, கடைசி ஆட்டத்தில் சென்னையிடம் தோற்றது. எனவே, இந்த ஆட்டம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும். பேட்டிங்கில் கோலி - படிக்கல் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறது. மிடில் ஆா்டரில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் சிறப்பாகவே விளையாடுகின்றனர். பெங்களூரின் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை.
பவுலிங்கில் ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோர் எதிரணியை திணறடித்தாலும், சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேலின் ஓவரில் ஜடேஜா 36 ரன்கள் குவித்தார். கடந்த ஆட்டத்தை மறந்து பார்த்தால் இதுவரை பெங்களூரு பவுலிங் சிறப்பாகவே இருந்தது. மேலும் சஹால், ஜேமிசன் ஆகியோர் பலமாகவே இருக்கிறார்கள்.
டெல்லியைப் பொறுத்தவரை, கடைசி 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் உள்ளது. தொடக்க வீரா்களான பிருத்வி ஷா, தவன் நல்லதொரு பார்மில் உள்ளனர். மிடில் ஆா்டரிலும் கேப்டன் பன்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என வலுவான வீரா்கள் வரிசையில் இருக்கின்றனர். அஸ்வின் இல்லாத நிலையில் பவுலிங்கில் அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோருக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. வேகப்பந்துவீச்சில் அவேஷ் கான், ககிசோ ரபாடா ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கின்றனர். சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் இன்றையப் போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.