தான் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அடைந்த முதல் வெற்றியை தனது மனைவிக்கு அர்ப்பணிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டி மும்பை மற்றும் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 22 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் வலுவாக உள்ளன. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இந்த சூப்பர் லீக் போட்டியில், தொடர்ச்சியாக 4 முறை தோல்வியடைந்ததையடுத்து, நேற்று நடந்த போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.
டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் ருதுராஜ் ஆட்டமிழக்க ராபின் உத்தப்பா சிறப்பா ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அவரைத் தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் ரன் அவுட்டானார். 6.4 ஓவரில் வெறும் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ஷிவம் துபே இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.
சிறப்பாக ஆடிய ராபின் உத்தப்பா 18.5 ஓவரில் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, களமிறங்கிய ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 216 ரன்களைக் குவித்தது. 46 பந்துகளில் 95 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூ ப்ளசிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். டூ ப்ளசிஸ் 8 ரன்களிலும், கோலி 1 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ராவத்தும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
7 ஓவரில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. இதனைத் தொடர்ந்து அகமது, பிரபுதேசாய் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. பிரபுதேசாய் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய அகமது 27 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆறாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது. இதனால் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வெற்றிக்குப் பின் பேசிய ஜடேஜா, கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது என்றும், முதல் வெற்றியை தனது மனைவிக்கு அர்ப்பணிக்க விருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு குழுவாக தாங்கள் மீண்டு வந்துள்ளதாகவும், ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.