உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,500 ஆகியுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் 80,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது கொரோனா.
இத்தாலியில், நேற்று ஒரு நாளில் மட்டும் 3,590 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மொத்தமாக 24,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 7,845 பேரும், ஜெர்மனியில் 5,813 பேரும் கொரனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம் எனவும் அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டிருக்கலாம் எனவும் அஷ்வின் கூறியுள்ளார்.