முகமது ஷமி, ரவி சாஸ்திரி எக்ஸ் தளம்
விளையாட்டு

முகமது ஷமி-க்கு வாய்ப்பு எப்போது? | பிசிசிஐயைக் கடுமையாகச் சாடிய ரவி சாஸ்திரி!

”முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்” என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Prakash J

2024-25 பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வரலாற்றைப் பதிவுசெய்தது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லாமல் வெளியேறியுள்ளது. இதனால் இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமரசனங்களை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தத் தொடரில் அனுபவம் நிறைந்த முகமது ஷமியைச் சேர்க்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். காரணம், ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் முகமது ஷமி கடுமையாக பயிற்சி செய்து வந்தார். தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கிரிக்கெட் மற்றும் சையது முஸ்டாக் டி20 போன்ற பல்வேறு தொடர்களில் ஷமி விளையாடினார்.

முகமது ஷமி

எனினும் ஷமியின் முழங்கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாக கூறி அவரை இந்திய அணியில் சேர்க்க மருத்துவ குழுவினர் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் ஷமி தேர்வு குறித்த விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், தாம் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி விட்டது என்பதை உணர்ந்த ஷமி, தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகி வருகிறார்.

அதற்காக, ஷமி ஆக்ரோஷமாக பந்துவீசி வரும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் ”வேகம், விவேகம் மற்றும் உத்வேகம் அனைத்தும் இருந்தால் உலகத்தை எதிர்கொள்ளலாம்” என்று ஷமி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, ”முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்” என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “முகமது ஷமி விஷயத்தில் பிசிசிஐ என்ன செய்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் முகமது ஷமி இந்திய அணிக்கு பெரிய பங்கினை வழங்கக்கூடியவர். அவரை இவ்வளவு மாதங்களாக கண்காணித்துவரும் மருத்துவக் குழுவால் ஏன் இன்னும் அவரது காயத்தை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை.

அவரது விஷயத்தில் பிசிசிஐ எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள்தான் முகமது ஷமியை கண்காணித்து விரைவில் குணப்படுத்தியிருக்க வேண்டும். முகமது ஷமி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷமி குறித்துப் பேசிய ரோகித் சர்மா, “வலியுடன் அவரை இங்கு கொண்டு வந்து விளையாட வைக்கும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இங்கு வந்து அணிக்காக பணியைச் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. சில வல்லுநர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். அவர்களது முடிவை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அவரை அழைப்போம். அவர் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். அவருக்கான கதவு திறந்தே உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். அந்தத் தொடருக்குப் பின்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட வந்த அவர், லண்டன் சென்று அறுவைசிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்தார். பின்னர், உள்ளூர்ப் போட்டிகளில் இறங்கி தமது திறமையை நிரூபித்தார்.