விளையாட்டு

“உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவர்” - சுப்மன் கில்லை கோலியுடன் ஒப்பிட்ட ரவி சாஸ்திரி!

ச. முத்துகிருஷ்ணன்

சிறப்பாக விளையாடும் விராட் கோலியை நினைவுப்படுத்துவதாக சுப்மன் கில்லை பாராட்டிய ரவி சாஸ்த்ரி அவரை “உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவர்” என்றும் வாழ்த்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இறுதி 2 பந்துகளில் ராகுல் தெவாட்டியாவின் அதிரடி சிக்ஸர்கள், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற உதவியது. ஐபிஎல் 2022 இல் தோல்வியே காணாத குஜராத்தின் பயணம் மீண்டும் தொடர்கிறது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தெவாட்டியா விளாசிய 2 சிக்ஸர்கள் மகத்தான பாராட்டுகளை அள்ளியது. ஆனால் 190 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்துவதில் முக்கிய பங்கை வகித்தவர், நேர்த்தியான 96 ரன்களை குவித்தவர் சுப்மன் கில். அவரை ஆனால் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுப்மன் கில்லை நினைவு கூர்ந்து பாராட்டினார்.

11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன், சுப்மன் கில் பஞ்சாப் அணிக்கு எதிராக 59 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். அதுவும் வெறும் 11 டாட் பால்களை மட்டுமே சந்தித்து இருந்தார். குஜராத் அணிக்கு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை அளித்தது சேஸிங்கை எளிதாக்கினார். அவர் பற்றி பேசிய ரவி சாஸ்திரி, “கில் அழகாக பேட்டிங் செய்தார். மிகவும் அழகாக..! அவர் பந்தை நேரப்படுத்திய விதம், பேக்ஃபுட்டில் அவர் ஆடிய சில ஷாட்கள், பிளேஸ்மென்ட், பவர் மற்றும் ஸ்கொயர் முன் அடிக்கும் திறன் ஆகியவை அவரை ஒரு சிறந்த வீரராக ஆக்குகின்றன. உலகின் தலைசிறந்த இளம் வீரர்களில் இவரும் ஒருவர்” என்று கூறினார்.

மேலும் “மிகக் குறைவான டாட் பால்கள். அவர் ஸ்ட்ரைக்கை அழகாக சுழற்றுகிறார், அதனால் அவர் மிகவும் பிஸியான வீரர் மற்றும் மோசமான பந்தை பவுண்டரிக்கு எறியும் திறன் கொண்டவர். அவர் சிறப்பாக விளையாடும் விராட் கோலியை நினைவூட்டுகிறார். அவர் தனது மிகச்சிறப்பான பார்மில் இருக்கிறார். இந்த சீசனில் 600-700 ரன்களை அவர் அடிப்பாரா என்று கேட்டால் “எளிதானது” என்றே கூறுவேன்.” என்றார் ரவி சாஸ்திரி