விளையாட்டு

சாம்சன், சுமித் விளாசல்..216 ரன்கள் குவித்த ராஜஸ்தான் : இலக்கை எட்டுமா சென்னை ?

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெஷ்வால் 6 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் வந்த டேவிட் மில்லர் ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 5 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்தடுத்த வீரர்களும் அவுட் ஆக, மறுபுறம் அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் டாம் குர்ரானுடன் ஜோடி சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் சிக்ஸர்களை விளாசினார். கடை ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸ்தான் அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ஆக உயர்ந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ஆர்ச்சர் 8 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.

சென்னை அணியில் ஆல்ரவுண்டர் சாம் குரான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 217 என்ற இமாலய இலக்கை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.