சண்டிகரில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் டக்அவுட்டில் இ-சிகரெட் பயன்படுத்திய காட்சி கேமராவில் பதிவாகி சர்ச்சை கிளப்பியுள்ளது. மைதான வளாகத்தில் புகைபிடித்தல், வேப்பிங் தடை என்ற பிசிசிஐ விதி மீறப்பட்டதோடு, இந்தியாவின் 2019 இ-சிகரெட் தடைச் சட்டத்தையும் இது மீறுவதாகும். இதனால் அபராதம் முதல் சிறை வரை தண்டனை சாத்தியம் என கூறப்படுகிறது.
நேற்று (ஏப்ரல் 28-ம் தேதி) சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்களை துரத்திக்கொண்டிருந்தது. அப்போது போட்டியின் 16வது ஓவரின் போது கேமரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓய்வு அறையை படம்பிடித்தது.
அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுத்வீர் சிங் சரக் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் முன்னிலையில் இ-சிகரெட் பயன்படுத்தி வேப்பிங் செய்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
பிசிசிஐ-யின் விதிமுறை படி மைதான வளாகத்திற்குள் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு அணியின் கேப்டனே அந்த விதியை மீறியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரியான் பராக்குக்கு தண்டனை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரம் இ-சிகரெட் பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலாகும். இந்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு "மின்னணு சிகரெட்டுகள் தடைச் சட்டம்" (PECA - Prohibition of Electronic Cigarettes Act, 2019) என்ற சட்டத்தைக் கொண்டு வந்து இ-சிகரெட்களை பயன்படுத்துவது மற்றும் விற்பதை தடை செய்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தண்டனைகளையும் விதிக்கவும் சட்டத்தில் அனுமதி உண்டு.
அதே போல அடுத்தடுத்த முறை தவறு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டால் முதல்முறை என்பதால் ரியான் பராக்குக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரம் அவரிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான இ-சிகரெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அல்லது அதனை அவர் பிற நபர்களுக்கு பகிர்ந்திருந்தாலோ அவருக்கு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.