இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி, மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 வது போட்டியில் நியூசிலாந்து வெற்றுபெற்றுள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது.
வடக்கிழக்கு பருவமழை காரணமாக திருவனந்தபுரத்திலும் நாளை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் வானிலை மைய அதிகாரி சுதேவன் கூறும்போது, ‘நாளை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்றார்.
’மழை வந்தால் மைதானத்தை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. போட்டி பாதிக்க வாய்ப்பில்லை. மழை விட்டு விட்டு பெய்தால் அது நின்ற பின் போட்டித் தொடங்கும். காலையில் இருந்து இரவு வரை மழை பெய்துகொண்டிருந்தால் கடினம்தான் ’ என்று கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயஸ் ஜார்ஜ் தெரிவித்தார்.