விளையாட்டு

விஐபி கலாச்சாரத்துக்கு நோ சொன்ன எளிமை டிராவிட்

rajakannan

ராகுல் டிராவிட்டின் ஆகப் பிரபலமானவராக இருந்தாலும் விஐபி கலாச்சாரத்தைப் பின்பற்றாத அவரது பாங்கு அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது.

அறிவியல் கண்காட்சி ஒன்றில் மக்களோடு மக்களாக தனது குழந்தைகளுடன் டிராவிட் வரிசையில் நிற்கும் படம் கடந்த சில தினக்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் விஐபி கலாச்சாரத்தை பின்பற்றும் நிலையில், டிராவிட் மிகவும் எளிமையாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளன. பலரும் அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். 

அதில், ராஜிவ் மிஸ்ரா என்பவர் ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தனது சகோதரிதான் டிராவிட் மகனின் வகுப்பு ஆசிரியர். அவர் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்வார் என்று மிஸ்ரா பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர். எதிரணியின் பந்துவீச்சாளர்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கியவர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்தை கிரீஸுக்கு மிக அருகிலேயே அழகாக நிறுத்திவிடுவார். பேட்டிங் மட்டுமல்லாது விக்கெட் கீப்பர், கேப்டன் என பலதுறைகளில் அவரது பங்களிப்பு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டிராவிட் ஓய்வு பெற்ற போதும் இந்திய அணியில் மறைமுகமாக அவரது பங்களிப்பு தொடர்ந்து வருகிறது. இப்போதும் பிரபலமான அவர் எல்லோரையும் போல எளிமையாக வரிசையில் நின்றது மேலும் அவரைப் பிரபலமாக்கி இருக்கிறது.