விளையாட்டு

'ராகுல் பாய், என்ன இதெல்லாம்?' - கோலி, நடராஜனை கவர்ந்த புது 'அவதார' டிராவிட்!

'ராகுல் பாய், என்ன இதெல்லாம்?' - கோலி, நடராஜனை கவர்ந்த புது 'அவதார' டிராவிட்!

webteam

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நடித்துள்ள புதிய விளம்பரம் நெட்டிசன்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த விளம்பர வீடியோ வைரலாகி வருகிறது.

கிரெடிட் கார்ட் கட்டணங்களைச் செலுத்தும் 'கிரெட்' இணையத்தளம் மற்றும் ஆப் விளம்பரத்தில்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நடித்துள்ளார். கிரிக்கெட் களத்தில், பொது வெளியில் மிகவும் அமைதியான, 'மிஸ்டர் கூல்' ஆக அறியப்படும் டிராவிட், இந்த விளம்பரத்தில் முற்றிலும் கோபமான மனிதராக மாறி நடித்திருப்பதுதான் அந்த விளம்பரம் இவ்வளவு பேசப்படுவதற்கு காரணம்.

விளம்பரத்தில் ஆத்திரத்துடன் வசனங்களைப் பேசும் டிராவிட், கோபத்தின் உச்சியில் காரின் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவர் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் வீரர் நடராஜன் போன்றவர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த, விராட் கோலி, ``ராகுல் பாயின் இந்த பக்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார். இதேபோல், ``ராகுல் சார், யாரோ ஒருவர் மோசமான காயம் அடையப் போகிறார்" என்று நடராஜன் ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல் ஜோமோட்டோ, ``சாலையில் கோபமான ரவுடி காரணமாக இந்திரா நகர் மைலைட்டில் டெலிவரி இன்று தாமதமாகின்றன" என்றும், ``சிலர் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. சாலைகளில் ரவுடி இல்லை, ஒரு சுவர்; இரண்டு கண்களுடன் உள்ளது" என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.