டென்னிஸ் தரநிலையில் டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகரகாக கருதப்படும் இந்தப்போட்டி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும். தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பர். தற்போது நடைபெறும் இந்தப்போட்டியில் முன்னணி வீரர்களான ஆன்டிமுர்ரே, ஜோகோவிச், வாவ்ரிகா ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அதனால் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோருக்கு கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.
இந்த வருடம் ஆரம்பம் முதலே இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். 36 வயதான பெடரர் இளம் வீரரை போல துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு மோசமான ஃபார்மின் காரணமாக பெடரரால் இந்தப்போட்டியில் பங்கேற்க இயலவில்லை. தற்போது இதில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த முறை இங்கு பட்டம் வெல்லும் முனைப்பில் பெடரர் களமிறங்குகிறார்.
பல்வேறு பட்டங்களை வென்றுள்ள நடாலுக்கு இந்தப்பட்டம் எட்டாக்கனியாகவே உள்ளது. இருமுறை இறுதிப்போட்டி வரை வந்து தோல்வி அடைந்துவிட்டார். இந்த முறை பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். பெடரருக்கு, நடால் கடும் போட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.