விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது ஸ்டேடியத்தில் இனவெறி கூச்சல் - இந்திய ரசிகர்கள் புகார்

JustinDurai

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. 5வது நாளான இன்று விக்கெட் இழப்பு ஏதுமின்றி இங்கிலாந்து எணி வெற்றி இலக்கை எட்டியது. ரூட் (142), பேர்ஸ்டோவ் (114) இருவரும் சதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிளாக் 22-ல் அமர்ந்திருந்த இந்திய ரசிகர்களை சில இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் இனவெறியுடன் தொடர்ந்து மோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இதையடுத்து இந்திய ரசிகர்கள் மைதான ஊழியர்களிடம் சென்று புகார் அளித்தனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய ரசிகர்களை சமாதானப்படுத்தி மீண்டும் இருக்கையில் அமரச் சொல்லியிருக்கின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள், இதுகுறித்து விளக்கமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்றனர். அதன்பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: நியூசிலாந்தில் வீரர், வீராங்கனைகளுக்கு இனி சம ஊதியம்! எந்த விளையாட்டில் தெரியுமா?