விளையாட்டு

’ரபாடா கிண்டல் செய்தார், நான் அமைதி காத்தேன்’: புஜாரா

’ரபாடா கிண்டல் செய்தார், நான் அமைதி காத்தேன்’: புஜாரா

webteam

’தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா, என் கவனத்தை சிதறும்படி கிண்டல் செய்தார், ஆனால் நான் கண்டுகொள்ள வில்லை’ என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையே வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, மயங்க் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராத் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய புஜாரா, தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா ஸ்லெட்ஜ் செய்ய முன்றார் என்றும் தான் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘அவர் (ரபாடா) என்ன சொன்னார் என்பது நினைவில் இல்லை. ஆனால், அவர் எப்போதும் பேட்ஸ்மேன்களை நோக்கி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் என் கவனத்தை திசைத் திருப்ப முயற்சி செய்வார் என்பது எனக்குத் தெரியும்.

அவர் மட்டுமல்ல, எந்த பந்துவீச்சாளரும் ஏதாவது தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க மாட்டேன். ஏனென்றால், பேட்ஸ் மேனாக என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். எனது மனநிலையில் உறுதியாக இருக்கும்போது, அவர்கள் சொல்வதை கவனிக்க மாட்டேன்’ என்றார்.