விளையாட்டு

விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!

JustinDurai

செஸ் போட்டியில் வென்ற கையோடு மறுநாள் பொதுத் தேர்விலும் கலந்து கொண்ட பிரக்ஞானந்தாவை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

இணைய வழியில் நடைபெற்ற செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

இந்த நிலையில் 16 வயதான பிரக்ஞானந்தா தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார். பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறுவதால் காலை 8.30 மணிக்கு பள்ளி செல்லும் பிரக்ஞானந்தா, இரவு நேரத்தில் நள்ளிரவு 2.20 மணி வரை ஆன்லைனில் இந்த தொடரில் பங்கேற்கிறார். போட்டியில் வென்ற கையோடு மறுநாள் பொதுத் தேர்விலும் கலந்து கொண்ட பிரக்ஞானந்தாவை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், "கடந்த சில நாட்களாக நம்பமுடியாத அளவிற்கு சோர்வாக இருந்தது. ஒரே நாளில் தேர்வு எழுதுவது மற்றும் போட்டியில் விளையாடுவது எனக்கு இதுவே முதல்முறை" என்று கூறியுள்ளார்.

செஸ் உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார் பிரக்ஞானந்தா. மிக இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். கடந்த 2013-ல் உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்யவிக் ஓபன் சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தார் பிரக்ஞானந்தா. சில மாதங்களுக்கு முன்னர் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் மீண்டும் அவரை வீழ்த்தி இருந்தார் பிரக்ஞானந்தா.

இதையும் படிக்கலாம்: ’ஆர்சிபி ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ - தினேஷ் கார்த்திக் உருக்கம்!