விளையாட்டு

'அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை' - கபில் தேவ் தாக்கு

'அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை' - கபில் தேவ் தாக்கு

JustinDurai

அஸ்வினிடம் முன்பு இருந்த ஃபார்ம் இல்லை என்கிறார் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.  

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.  இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்தே அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இந்த தொடரில் சாஹல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அஸ்வின் பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார் என்பதால் அவர் தொடர்ந்து வாய்ப்பு பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் நடப்பு தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த பவுலராக அஸ்வின் திகழ்கிறார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் அவர். எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அஸ்வினே களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ''இப்போதுவரை அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் விக்கெட் எடுத்தார். ஆனால் அவர் விக்கெட் எடுத்தது போன்று தெரியவில்லை. பேட்ஸ்மேன்களே விக்கெட் ஆனது போன்று தான் இருந்தது. ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன விதத்தை அஸ்வினாலேயே நம்ப முடியவில்லை. அவரிடம் முன்பு இருந்த ஃபார்ம் இல்லை. அஸ்வின், சாஹல் இருவரில் யாரை சேர்ப்பது என்பது அணி நிர்வாகத்தின் முடிவு தான். ஒருவேளை அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அஸ்வினை சேர்க்கட்டும்'' என்றார்.

இதையும் படிக்கலாமே: ‘தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இதுதான்’ - ரகசியத்தை உடைத்த விராட் கோலி!