விளையாட்டு

மிஸ்ஸான மொராக்கோவின் கடைசி சான்ஸ்! மூன்றாமிடம் பிடித்து அசத்திய குரோஷியா!

kaleelrahman

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி குரோஷிய அணி 3 ஆம் இடத்தை பிடித்து அசத்தியது. 

கெத்து காட்டும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்றாம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணியும், பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்த குரோசியா அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் நீயா நானா என சமபலத்துடன் களம்கண்டன. இதில், முதல் பாதி ஆட்டதின் 7-வது நிமிடத்தில் குரோசியா வீரர் ஜிவார்டியல் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து மொராக்கோ அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல்பாதி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் டேரி தனது அணிக்காக ஒருகோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல்பாதி ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் குரோசியா வீரர் ஆர்சிக் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில், முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் குரோசியா அணி 2 கோல்கள் அடித்து 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில் 2:1 என்ற கோல் கணக்கில் குரோசியா அணி வெற்றிபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாம் இடத்தை பிடித்தது. அதேபோல் மொராக்கோ அணி நான்காம் இடத்தை பிடித்து தங்களது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தனர்.

இந்நிலையில் உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று உலகக் கோப்பையை தட்டித் தூக்கும் அணி அர்ஜென்டினாவா பிரான்ஸா என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.