pv sindhu web
விளையாட்டு

2 ஆண்டு சாம்பியன்ஷிப் வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பிவி சிந்து! சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து டைட்டில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Rishan Vengai

2024 சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிவி சிந்து, லக்‌ஷ்யா சென், ட்ரீசா-காயத்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியிருந்தனர். இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பிவி சிந்து மற்றும் லக்‌ஷயா சென் மீது அனைவருடைய கவனமும் இருந்தது.

இந்த இரண்டு வீரர்களும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது மட்டுமில்லாமல், ட்ரீசா-காயத்ரி ஜோடியும் முதல்முறையாக சையத் மோடி சர்வதேச பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

2 ஆண்டு வறட்சிக்கு பிறகு சாம்பியன் பட்டம்..

சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் லுயோ யு வூ இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த இரண்டு வீரர்களும் ஒரு சாம்பியன் பட்டத்திற்கு மோதும் முதல் மோதல் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய இறுதிப்போட்டியில், முதல் செட்டில் ஆட்டமானது 5-3 என இந்த பக்கமா அந்த பக்கமா என்ற நிலையிலேயே சென்றது. 13-9 என ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலையில், அங்கிருந்து கியரை மாற்றிய பிவி சிந்து 21-14 என முதல் செட்டை கைப்பற்றினார்.

பிவி சிந்து

இரண்டாவது செட்டில் சீனாவின் லுயோ விட்டுக்கொடுக்காமல் விளையாட ஆட்டம் 5-5 என ஆரம்பித்து 10-10 என சூடு குறையாமல் விறுவிறுப்பானது. இரண்டாவது செட்டை கைப்பற்ற பிவி சிந்து நிச்சயம் கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால் தன்னுடைய பிரிலியன்ஸ் மூலம் 21-16 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றிய பிவி சிந்து, சீனாவின் லுயோ யு வூவை 21-14, 21-16 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

பிவி சிந்துக்கு இது மூன்றாவது சையத் மோடி சர்வதேச பட்டமாகும். முதலில் 2017 மற்றும் 2022-ல் வென்றிருந்த அவர் 2024 பட்டத்தை வென்று ஹாட்ரிக்காக மாற்றினார்.