விளையாட்டு

2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து!

2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து!

webteam

’கடந்த 2 மாதமாக செல்போனை பயன்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டடதால்தான் இந்த வெற்றி கிடைத்தது’ என்று பி.வி.சிந்துவின் உடல்தகுதி பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் மடப்பள்ளி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆந்திர முதல்வர் உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடுமையான பயிற்சி மூலமே இதைச் சாதிக்க முடிந்தது என்று அவரது உடல் தகுதி பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’கடந்த சில நாட்களாக அவரது உடலை வலுப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டோம். ஒவ்வொரு வருக்கும் தசைகள் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிந்துவுக்கு சில இடங்களில் தசைகள் அவரது ஆட்டத்துக்கு சிக்கலை ஏற்படுத்தின. அதைப் பயிற்சியின் மூலம் சரி செய்தோம். நாங்கள் சொல்வதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள் வார், சிந்து. ஏனென்றால் அவர் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்.

கோர்ட் கிடைக்காதபோது, செம்மண் தரையில் பயிற்சிப் பெற சொன்னாலும் எந்த புகாரும் சொல்லாமல் விளையாடுவார். அவர் எதையும் நுணுக்கமாகக் கவனிப்பவர். கடந்த 2 மாதமாக செல்போன் பயன்படுத்தாமல் பயிற்சியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்’’ என்று தெரிவித்துள்ளார்.