விளையாட்டு

வெற்றியை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்... மங்கிப்போன பிளே ஆஃப் வாய்ப்பு

JustinDurai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை போராடி தோல்வியை தழுவியது.

அந்த 16ஆவது ஓவர் சோர்ந்துபோயிருந்த சென்னை அணி ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கையை விதைத்தது. சந்தீப் சர்மா வீசிய ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள், பவுண்டரி என விளாசினார் அம்பத்தி ராயுடு. அந்த ஓவரில் மட்டும் 23 ரன்களை சென்னை அணி சேர்த்தது. அடுத்த 4 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ராயுடு, ரபடா வீசிய 18ஆவது ஒவரின் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இது ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் பேரடியாக அமைந்தது. அவர் 39 பந்துகளில் 6 சிக்சர்கள், 7 பவுண்ட்ரிகளுடன் 78 ரன்கள் விளாசியிருந்தார்.

கடந்த போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்த பினிஷர் தோனி களமிறங்கியதால் அதே நம்பிக்கை சென்னை ரசிகர்களின் மனதில் தொடர்ந்தது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 35 ரன்கள் எடுக்கவேண்டும் என பரபரப்பான கட்டத்தில் அப்போது போட்டி இருந்தது. 19 ஆவது ஓவரில் ஒரு பவுண்ட்ரி உள்பட 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என இருந்த சூழலில், ரிஷ தவான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டு அசத்தினார் தோனி. எனினும் இந்த கொண்டாட்டமும் நம்பிக்கையும் நீடிக்கவில்லை. அடுத்த இரண்டாவது பந்தில் தோனி அவுட்டாக இப்போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றி கனவு சிதைந்தது. புள்ளிகள் பட்டியலில் சென்னை 9ஆவது இடத்தில் இருக்கும் சூழலில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பும் ஏறக்குறைய மங்கிவிட்டது.

பஞ்சாப் அணியில் பவர் பிளேவில் சந்தீப் சர்மாவும் கடைசி நேரத்தில் ரபடாவும் பந்துவீச்சில் அசத்தினர். முதலில் பேட்டிங் செய்தப்போது பஞ்சாப் அணியின் தொடக்கம் மெதுவாகவே இருந்தது. பளர் பிளேவில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ச பேட்டை சுழற்ற ரன்ரேட் உயர்ந்தது. ராஜபக்சவுக்கு சென்னை வீரர்கள் இரண்டு முறை கேட்சை தவறவிட்டு லைஃப் கொடுத்தனர். அவர் 42 ரன்கள் சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 88 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்று, ஆட்ட நாயகன் விருதையும் தனக்காக்கினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிக்கலாம்: 200வது ஐபிஎல் மேட்சில் 6 ஆயிரம் ரன்களை கடந்து தவான் புதிய சாதனை!