விளையாட்டு

இனி போர்க்களம்தான்: கவுதம் காம்பீர் ஆவேசம்!

webteam

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ‘இனி போர்க்களத்தில்தான் சந்திக்க வேண்டும்’’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். 

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா அருகே சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்ர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது கோழைத்தனமான செயல் என உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ட்விட்டரில், ’’இப்போது பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். 

’’நான் முதலில் நேசித்து ராணுவப் பணியை. இப்போதும் ராணுவப் பணி மீது ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரே வருத்தம், என்னால் ராணுவத்தில் பணியாற்ற முடியவில்லை என்பதுதான்’’ என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் காம்பீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், விவிஎஸ் லட்சுமண் கூறும்போது, ‘’நமது வீரர்கள் மீதான தாக்குதலைக் கேட்டு பெரும் வருத்தம் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடையக பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக், ‘’இந்த கோழைத்தனமான தாக்குதல் பெரும் வலியை ஏற்படுத்தியது. நமது வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இந்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

முகமது கைஃப், ‘’இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட கோழைகளுக்கு சரியான பாடம் விரைவில் கற்பிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

ரிஷாப் பன்ட், ’’இது கோழைத்தனமான தாக்குதல். இந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது’’ என்று தெரிவித்துள்ளார். இதே போல இந்திய கேப்டன் விராத் கோலி,  ரோகித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.