இந்தியா வங்கதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்று தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்கள் கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் 14ஆவது ஓவரை வீச வந்த இஸ்லாம் சுப்மன் கில் விக்கெட்டை எடுத்து வெளியேற்றினார். பின்னர் பந்துவீச வந்த கலீல் அகமது கேப்டன் ராகுலை பவுல்டாக்கி வெளியேற்ற, தொடர்ந்து வந்த் விராட் கோலியும் இஸ்லாம் பந்துவீச்சில் லெக் பை விக்கெட்டில் வெளியேற 48 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.
பின்னர் புஜாராவோடு கைக்கோர்த்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி 46 ரன்கள் சேர்த்திருந்த பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை எடுத்துச்செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், மெஹிடி ஹாசன் வீசிய பந்தில் பவுல்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் 200ஐ தொட்டது. 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த கூட்டணியை 261 ரன்கள் இருந்த நிலையில், புஜாராவை பவுல்டாக்கி பிரித்தார் டைஜுல் இஸ்லாம். 11 பவுண்டரிகள் விளாசி 90 ரன்களை சேர்த்திருந்த நிலையில் புஜாரா சதத்தை தவறவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில் முதல் நாள் போட்டியை 5 விக்கெட்டுகளோடு தான் இந்தியா முடிக்கும் என்று எதிர்பார்த்த போது, கடைசி ஓவரின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் விக்கெட்டை பங்களாதேஷ் வீழ்த்த முதல் நாள் முடிவில் 278 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 10 பவுண்டரிகளுடன் 82 ரன்னில் களத்தில் இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். சிறப்பாக பந்துவீசிய டைஜு இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பவுல்டாகியும் தப்பித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
84ஆவது ஓவரில் எபதாத் ஹொசைன் வீசிய 5ஆவது டெலிவரி லோ இன்ஸிவிங்காகி ஆஃப் ஸ்டம்பில் பட்டு போனது. பந்து ஸ்டம்பில் அடித்தும் பெய்ல் கீழே விழாமல் இருந்தது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகமல் தப்பித்தார். அப்போது அவர் 77 ரன்களில் களத்தில் இருந்தார். இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு ரன்களை குவிப்பார் என்று நாளை தான் பார்க்கவேண்டும். இந்நிலையில் அந்த விக்கெட் டெலிவரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.