ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா, சஹாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றது.
ராஞ்சியில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், முரளி விஜய் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.பின்னர் களமிறங்கிய புஜாரா ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா டெஸ்ட் போட்டிகளில் 3ஆவது இரட்டை சதத்தினைப் பதிவு செய்தார். போட்டியின் இரண்டாம் நாளில் களமிறங்கிய புஜாரா, 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்கள் குவித்து நான்காம் நாளில் ஆட்டமிழந்தார். 31வது ஓவரில் களமிறங்கிய புஜாரா 192 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். புஜாராவுக்கு பக்கபலமாக விளையாடிய சஹா சதமடித்தார். அவர் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு,199 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 7ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இணை என்ற பெருமையை புஜாரா-சாஹா இணை பெற்றது. 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் விஜய் ஹசாரே, ஹேமந்த் அதிகாரி இணை குவித்த 132 ரன்கள் என்ற 69 ஆண்டுகால சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.