விளையாட்டு

ஆஸி.யில் அசத்தியதால் கிரேடு மாறுகிறார் புஜாரா!

webteam

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், புஜாராவின் ஊதிய கிரேடை மாற்ற, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள் ளது. 

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணியின் ’சுவர்’ புஜாரா 193 ரன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 159 ரன், மயங்க் அகர்வால் 77 ரன், ஜடேஜா 81 ரன் எடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. மதிய உணவு இடைவேளை வரை, அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து ஆடி வருகிறது. 

இந்த தொடரில், இந்திய அணியின் புஜாரா இதுவரை 521 ரன் குவித்துள்ளார். ஏழு இன்னிங்ஸில் இந்த ரன்னை குவித்துள்ள அவரது ஆவரேஜ் 74.42 ஆக இருக்கிறது. இதில் மூன்று சதங்களும் அடங்கும். இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற நிலையில் தொடரில் முன்னி லை வகிக்க புஜாரா ‘நின்று’ ஆடியதே காரணம். இதனால் ஆஸியில் முதல் முறையாக இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பிருக்கிறது.

இதையடுத்து, புஜாராவை கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ, ஏ பிளஸ், பி, சி என்ற வரிசைபடி பிரிக்கப் பட்டிருக்கிறார்கள். அதன்படி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

டெஸ்ட் வீரரான புஜாரா, கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் வருடத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் ’ஏ’ கிரேட் ஒப்பந்தத்தில் இருக்கிறார். அவரது ஒப்பந்தத்தை ரூ.7 கோடி ஊதியம் வாங்கும் ’ஏ பிளஸ்’ வரிசைக்கு உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.