பெங்களூரு டெஸ்டின் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
முந்தைய நாள் ஸ்கோருடன் 3ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 6 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, தொடக்க வீரர் அபினவ் முகுந்த் விக்கெட்டை விரைவில் இழந்தது. அவர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 90 ரன்களைக் குவித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராத் கோலி 15 ரன்களும், ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை, புஜாரா-ரஹானே ஜோடி மீட்டது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 79 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.